Home -> News -> Cinema News -> சர்கார் – செங்கோல் கதை சர்ச்சை குறித்து – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

சர்கார் – செங்கோல் கதை சர்ச்சை குறித்து – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

சர்கார் – செங்கோல் கதை சர்ச்சை குறித்து சர்கார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார்!

விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று வருண் என்கிற ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையை நேரில் பார்ப்பதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்யராஜ் நேரில் வந்திருந்தனர். இந்த வழக்கில் சன் பிக்சர்ஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் செங்கோல் கதையை எழுதிய கதாசிரியர் வருண் என்கிற ராஜேந்திரனுக்கு சர்கார் பட டைட்டிலில் நன்றி தெரிவிக்க படத்தின் நிறுவனம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு படத்தை வெளியிட தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தீர்ப்பிற்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், “வழக்கம்போல நிறைய வதந்திகள் இஷ்டத்துக்கும் பரவிக் கொண்டிருக்கின்றன. அதற்கான விளக்கம் இது. மதிப்பிற்குரிய பாக்யராஜ் சார் வந்து, இதுமாதிரி பிரச்சினை போய்கிட்டு இருக்கு என்றார். ஒருவனுடைய ஓட்டைக் கள்ள ஓட்டாகப் போட்டுவிட்டார்கள் என்று வருண் ராஜேந்திரன் 10 வருடங்களுக்கு முன்பு ஒரு கருவை வைத்துக் கதை எழுதியிருக்கிறார். அது ஒரு சின்ன பொறி. மற்றபடி அந்தக் கதைக்கும், இந்தக் கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

ஆனால், நமக்கு முன்னாடியே ஒரு உதவி இயக்குநர் இதைப் பதிவு செய்து வைத்திருக்கிறார் என்பதற்காக, அவரைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் ஆரம்பத்தில் ஒரு கார்டு போடுங்கள் என்று பாக்யராஜ் சொன்னார். சரி என்று நானும் ஒப்புக் கொண்டேன். மற்றபடி சர்கார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ். அதில் எந்த மாற்றமும் கிடையவே கிடையாது. தீபாவளி நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.