Home -> News -> Cinema News -> விஜயதசமி நாளான இன்று குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி

விஜயதசமி நாளான இன்று குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி

தமிழகம் முழுவதும் விஜயதசமியான இன்று குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி கோவில்களில் சிறப்பாக நடைபெற்றது.
நவராத்திரி என்பது ஒன்பது நாட்களும் கல்விக் கடவுளான சரஸ்வதியை வழிபடும் நாட்களாகும். 10 ஆம் நாளான விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு எழுத்தறிவித்துக் கல்வியைத் தொடங்குவது தொன்றுதொட்ட வழக்கமாகும். இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கோவை சித்தாபுதூர் ஐயப்பன் திருக்கோவிலில் ஏராளமான குழந்தைகளுக்கு நாவில் அகரம் எழுதிக் கல்வி தொடங்கப்பட்டது.

இன்று பல கோயிகளில், குழந்தைகளின் நாவில் தங்க ஊசியால் அகரம் எழுதியும், குழந்தைகளின் விரல்களைக் கொண்டு பச்சரிசியில் தமிழ் எழுத்துக்களை எழுதிக் காட்டினர். தூத்துக்குடியில் கலைவாணி ஆலயத்தில் அரிசி, நெல் ஆகியவற்றின் மீது மஞ்சள் பொடியைத் தூவி தங்கள் பிள்ளைகளுக்கு எழுதச் சொல்லிக் கொடுத்தனர்.

இதே போல் திருநெல்வேலியில் சரஸ்வதி கோவில், திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி அம்மன் ஆலயம், திருப்பூர் ஐயப்பன் கோவில் மற்றும் பல்வேறு கோயில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகளின் நாக்கில் ஓம் என்று தேனில் எழுதியும், குழந்தைகளின் விரலைப் பிடித்து அரிசியில் ஓம் என்று பெற்றோர்கள் எழுதியும் எழுத்தறிவித்தனர்.