Home -> News -> Cinema News -> பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்

உடல்நலக்குறைவால் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் மகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.*

அலெக்ஸாண்டராக பிறந்த மகேந்திரனை, அவரது பேச்சால் கவர்ந்த எம்.ஜி.ஆர், திரைத்துறைக்கு அழைத்து வந்தார். ஆரம்ப காலத்தில் திரைப்படங்களுக்கு கதை வசனம் மட்டுமே எழுதி வந்த மகேந்திரன் இயக்கிய முதல் படமான ‘முள்ளும் மலரும் ’ இன்று வரை தமிழ் சினிமா கண்ட சிறந்த படைப்புகளுள் ஒன்றாக போற்றப்படுகிறது.

தொடர்ந்து மகேந்திரன் இயக்கத்தில் வெளியான உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, நண்டு, ஆகிய படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு முன்னேற்றியதில் இயக்குநர் மகேந்திரனின் படங்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு. ஆரம்பத்தில் பல திறமையான நடிகர்களை உருவாக்கிய மகேந்திரன், இன்று அவரே பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் மிரட்டி வருகிறார்.

தெறி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து மிரட்டிய இயக்குநர் மகேந்திரன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்திலும் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். மேலும் விஜய்சேதுபதியுடன் சீதக்காதி படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

79 வயதாகும் மகேந்திரன் உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன் அவரது மகன் ஜான் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அப்பாவுக்காக பிரார்த்தியுங்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.