Home -> News -> ரஜினி முதலமைச்சர் வேட்பாளர் என்றால் ஆதரிப்பேன் : நடிகர் ராதாரவி

ரஜினி முதலமைச்சர் வேட்பாளர் என்றால் ஆதரிப்பேன் : நடிகர் ராதாரவி

ரஜினி முதலமைச்சர் வேட்பாளர் என்றால் அவர் பின்னால் நான் நிற்கத் தயார் என நடிகரும் அதிமுகவின் முக்கிய பிரமுகருமான ராதாரவி பேசினார்.

முன்னாள் மேயரும், ரஜினியின் தீவிர ஆதரவாளருமான கராத்தே தியாகராஜனின் பிறந்த நாள் விழாவில் அதிமுக பிரமுகர் நடிகர் ராதாரவி பேசினார். அப்போது அவர் ரஜினி குறித்தும், ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் பின்னால் நிற்கத் தயார் என்றும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவில் ராதாரவி பேசியதாவது: கராத்தே தியாகராஜன் என்றால் நட்பு என்று அர்த்தம். எந்த ஒரு விஷயம் என்றாலும் ஓடிவந்து உதவுவார். எனது தாயார் மரணம், சரத்குமார் அண்ணன் மரணம் உள்ளிட்ட பல விஷயங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவர் எங்கே இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படமாட்டார். யார் அழைத்தாலும் ஓடிவந்து உதவுவார்.

மேடையில் எஸ்.வி.சேகர் உள்ளார். நாங்கள் எல்லோரும் நட்பாக இருப்பவர்கள். நட்பாக இருப்பவர்கள் என்றால் எதிர்காலத்தில் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்க வேண்டும். இருப்போம் என்று நினைக்கிறேன்.ரஜினி வருங்காலத்தில் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் நான் அவர் பின்னால் நிற்கத் தயார். என்னங்க நீங்க அவர் பின்னாடி நிற்கிறேன் என்கிறீர்கள் என்று என்னைக் கேட்டார்கள். ஆமாய்யா? ரஜினி பாஜக. அப்புறம் அதிமுக கூட்டணிதானே. அப்படி என்றால் சரிதானே என்றேன். அவர் முதலமைச்சர் பொறுப்புக்கு நிற்கிறார் என்றால் தொடை நடுங்குகிறவர்கள் இடம் வேறு.

சகோதரர் ராஜசேகரிடம் பேசும்போது சொன்னேன். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று சொன்னேன். அவர் எப்படி வெல்வீர்கள் என்று கேட்டார். ஜெயிப்போம் அவ்வளவுதான். ஏனென்றால் பவர் இருக்கவேண்டும். மனிதாபிமானம் இருக்கவேண்டும். எதிர்க்கிற சக்தி வேண்டும். இது எல்லாம் இருந்தால் வெற்றி நிச்சயம். இவை எல்லாம் இணைந்துள்ளது. ஏனென்றால் வலுவான சக்தி ஒன்று சேரும்போது வலுவற்ற சக்தி தோற்கும். உடனே எல்லோரும் சொல்வார்கள். இவர் அவரைப் பற்றித்தான் பேசுகிறார் என்று. இணையதளத்தில் போட்டுவிடுவார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். நான் அவரைப் பற்றித்தான் பேசினேன். நானெல்லாம் மன்னிப்பு கேட்கிற ரகம் கிடையாது.

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று கராத்தே தியாகராஜன் சொல்லிக்கொண்டே இருக்கிறார். நானும் அதை நம்பிச் சொல்கிறேன். அவர் வந்தால் நானும் உடன் வருவேன் என்று. ரஜினி சடக்கென்று பேசி ஒரு முடிவை எடுக்கமாட்டார். யோசிச்சுத்தான் எடுப்பார். ஆனால் இந்த முறை முடிவெடுப்பார். சைதாப்பேட்டை இடைத்தேர்தலில் கராத்தே தியாகராஜன் இந்த டிவிஷன் வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கேட்டு வாங்கினார். அவ்வளவு நம்பிக்கை உள்ளவர் கராத்தே தியாகராஜன். இவ்வாறு ராதாரவி பேசினார்.