" /> My Title page contents
Home -> News -> National News -> நியமன எம்எல்ஏக்கள் புதுவை சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுப்பு

நியமன எம்எல்ஏக்கள் புதுவை சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுப்பு

 

புதுவையில் மாநில அரசின் பரிந்துரையின்றி பாஜக வை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை மத்திய அரசு நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமித்தது, இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நியமனம் செல்லும் என தீர்ப்புவெளியானது. இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிநாராயணன், தனலட்சுமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர், இந்த வழக்கு மீதான இறுதி விசாரணை வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளது.

இதனிடையே புதுவை துணை நிலை ஆளுனர் கிரண்பேடி உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடையேதும் விதிக்கவில்லை என்றும், இதனால் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபைக்குள் செல்லலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை சட்டசபைக்குள் வந்து சட்டசபை செயலர் வின்சென்ட் ராயரை சந்தித்து தங்களை சட்டசபைக்குள் அனுமதிக்க கோரி கடிதம் அளித்தனர். திங்கட்கிழமை சட்டசபைக்குள் நுழைந்தே தீருவோம் என சாமிநாதன் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரையும் சட்டசபைக்கு அனுமதிக்க கூடாது என சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இன்று காலை புதுவை சட்டசபை வழக்கத்தை விட அதிகமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன, சரியாக 9.35 மணிக்கு 3 காரில் 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டசபை வந்தனர். இதனை தொடர்ந்து சட்டசபையின் வாயிற்கதவு இழுத்து பூட்டப்பட்டது. 3 பேரும் தங்களை உள்ளே அனுதிக்க வலியுறுத்தினர். சபை காவலர்கள் சபாநாயகர் உங்களை உள்ளே அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தனர்.

உடனே சாமிநாதன் வாய்மொழி உத்தரவு செல்லாது என்றும் எழுத்து பூர்வ உத்தரவை காட்ட வேண்டும். இல்லையென்றால் தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் சபை வாயிலேயே காத்துகிடந்தனர்.

இதுகுறித்து நியமன சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் கூறியதாவது.

சபாநாயகர் நேரடியாக வந்து எங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என கூற வேண்டும். இல்லையென்றால் சபை காவலர்கள் சபாநாயகரின் எழுத்து பூர்வமான உத்தவை காட்ட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நீண்ட நேரம் சட்டசபையின் வாயிற்கதவருகே காத்திருந்த 3 பேரும் 10.30 மணிக்கு காரில் புறப்பட்டு சென்றனர். சுமார் 1 மணி நேரம் தொடர்ந்த அவர்களது போராட்டத்தினால் சட்டசபை வெளியே பரபரப்பு ஏற்பட்டது.