" /> My Title page contents
Home -> News -> National News -> துணை ஜனாதிபதியை முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதுவை எம்எல்ஏக்கள் குழு சந்திப்பு

துணை ஜனாதிபதியை முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதுவை எம்எல்ஏக்கள் குழு சந்திப்பு

 

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கடந்த வாரம் நடைபெற்ற சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதையடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் டெல்லி சென்று அனைத்து தேசியக்கட்சி தலைவர்களையும், ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் உள்ளிட்டோரையும் சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

டெல்லியில் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை முதல்வர் நாராயணசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் குழு சந்தித்து, மாநில அந்தஸ்து வழங்கக்கோரி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வழங்கினர். இதில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஆர்.கே.ஆர். அனந்தராமன், தீப்பாய்ந்தான், தனவேலு, விஜயவேணி, தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் சிவா, கீதா ஆனந்தன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சுதாகர் ரெட்டி, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரையும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ சகதா ராய் எம்.பி.யையும் சந்தித்து மனு அளித்தனர்.

நேற்று காலை தெலுங்கு தேச கட்சி தலைவர் ரமேஷ் எம்.பி.யையும், பின்னர் தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரையும் சந்தித்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க பாராளுமன்றத்தில் குரல் எழுப்பும்படி வலியுறுத்தினர்.
பின்னர் துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடுவையும் சந்தித்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க உதவும்படி வலியுறுத்தினர். அதன்பின்னர் பிற்பகல் 2 மணியளவில் மத்திய நிதி அமைச்சர் (பொறுப்பு) பியூஸ் கோயலையும் சந்தித்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும்படி வலியுறுத்தினர்.

துணை ஜனாதிபதியை சந்திக்கும்போது மாநில அந்தஸ்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும் கலந்து கொண்டார். அதுபோல் நேற்று குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதுச்சேரியிலேயே தங்கியிருந்த அமைச்சர் நமச்சிவாயமும் பங்கேற்றார்.

மேலும் டெல்லியில் நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அங்கு இருக்கும் என்.ஆர். காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனும் மத்திய நிதி அமைச்சர் பியூஸ் கோயலை சந்திக்கும்போது உடன் இருந்து பங்கேற்று, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வலியுறுத்தினார்.