Home -> News -> National News -> பிரதமர் மோடியுடன் சவுதி இளவரசர் சந்திப்பு: 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மோடியுடன் சவுதி இளவரசர் சந்திப்பு: 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல்லியில் அரசு முறை பயணமாக நேற்று இரவு இந்தியா வந்த சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். இன்று காலை குடியரசு தலைவர் மாளிகையில் சவுதி இளவரசருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் இளவரசர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையில் ஐந்து முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், பாகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்தார். அவரை டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

மேலும், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மலர்ச்செண்டு அளித்து வரவேற்றார். இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் சவுதி இளவரசருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரவேற்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். பிரதமர் மோடியும் உடனிருந்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை, சவுதி இளவரசர் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, இருநாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முன்னிலையில் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா குறித்த 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சவுதி இளவரசரை சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.