Home -> News -> National News -> உலகின் உயரமான சிலையைத் திறந்து வைத்தார் மோடி

உலகின் உயரமான சிலையைத் திறந்து வைத்தார் மோடி

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்றிணைத்தவர் படேல் என அவரது சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின், 143வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறதுது. இந்நாளில், அவரின் தியாகத்தைப் போற்றும் வகையில், குஜராத் மாநிலத்தில் கட்டமைக்கப்பட்ட அவரின் உலகின் மிக உயரமான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

குஜராத் மாநிலம் கேவாடியா பகுதியில், நர்மதை நதிக்கரையின் ஓரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் சுமார் 189 மீட்டராகும், அதாவது 597 அடி உயரம். இந்த சிலையை வடிவமைக்க சுமார் ரூ. 2,989 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் மக்கள் தேசிய ஒற்றுமை தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நாள் இந்தியாவின் வரலாற்றில் நினைவுகொள்ளப்பட வேண்டிய நாள். சர்தார் வல்லபாய் படேல் மட்டும் நாட்டை ஒன்றிணைக்க வேண்டும் என்ற உறுதிமொழி எடுக்கவில்லை என்றால், கிர் காடுகளின் சிங்கங்களையும், ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரையும் காண நாம் விசா வாங்க வேண்டி இருந்திருக்கும். அவர் இல்லை என்றால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இன்று ரயில்கள் இயங்காது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.