Home -> News -> National News -> ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணை!

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணை!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தையடுத்து ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் வழக்குத் தொடுத்தது. இதைத் தொடர்ந்து, ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா குழுமம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி முன்வைத்த வாதம்:

சுற்றுச்சூழல் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. மேலும், விசாரணைக் குழு உள்ளிட்டவற்றை அமைக்கவும் அதற்கு அதிகாரம் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விதிகளை மீறுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. ஸ்டெர்லைட் ஆலை எப்போதுமே விதிகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்றி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பாக தொழிற்பேட்டையில் 67 தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலையால் ஒரு சதவீதம் மட்டுமே சல்பர்-டை-ஆக்ஸைட் வாயு வெளியேறுகிறது. மீதமுள்ள 95 சதவீதம் சல்பர்-டை-ஆக்ஸைட் வாயு அப்பகுதியில் அமைந்துள்ள அனல் மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றால் வெளியிடப்படுகிறது என்று அவர் வாதிட்டார். இதைத் தொடர்ந்து வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு (பிப்ரவரி 7) ஒத்திவைத்தனர்.