" /> My Title page contents
Home -> News -> National Politics -> 23ம் தேதி முதல்வர் தலைமையில் எம்எல்ஏக்கள் பிரதமரை சந்திக்க முடிவு

23ம் தேதி முதல்வர் தலைமையில் எம்எல்ஏக்கள் பிரதமரை சந்திக்க முடிவு

New Delhi: Prime Minister Narendra Modi is greeted by Chief Minister of Puducherry, V Narayanasamy in a meeting in New Delhi on Wednesday. PTI Photo (PTI6_22_2016_000053B)

புதுவையில் கவர்னருக்கும் ஆட்சியாளர்களுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. கவர்னராக கிரண்பேடி அரசின் அன்றாட பணிகளிலும் தலையிட்டு வருகிறார். கவர்னருக்கு அனுப்பும் கோப்புகளுக்கு உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை. அதே நேரத்தில் மக்களால் தேர்வு செய்த அரசு இருக்கும் போது கவர்னருக்கு அதிகாரம் கிடையாது என ஆளும் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம்ஆத்மி கட்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கோர்ட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என தீர்ப்பளித்தது.

இதையடுத்து யூனியன் பிரதேசமான புதுவைக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் என ஆட்சியாளர்கள் கூறினர். ஆனால், கவர்னர் கிரண்பேடி டெல்லி யூனியன் பிரதேச சட்ட விதிகள் வேறு, புதுவை சட்ட விதிகள் வேறு. கோர்ட்டின் தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என கூறி வருகிறார்.

இதுதொடர்பாக சட்டசபையில் விவாதம் நடந்தது. அப்போது அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், தி.மு.க. உறுப்பினர் சிவா ஆகியோர், இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். கூட்டத்தொடரை பாதியில் நிறுத்திவிட்டு டெல்லிக்கு அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களை அழைத்து செல்லுங்கள். அங்கு பிரதமர், உள்துறை மந்திரி, அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்து முறையிடுவோம்.புதுவைக்கு மாநில அந்தஸ்து கோருவோம். அப்போதுதான் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க முடியும் என சட்டசபையில் வலியுறுத்தினர். இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி சம்மதம் தெரிவித்தார்.

இந்த நிலையில் புதுவை சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று வரும் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒரு கடிதத்தை நாராயணசாமி அளித்தார் அந்த கடிதத்தில், புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கான கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர், உள்துறை மந்திரி, நிதித்துறை மந்திரி, தேசிய கட்சி தலைவர்களை சந்திக்க எம்.எல்.ஏ.க்கள் டெல்லி செல்ல திட்டமிட்டு உள்ளோம். டெல்லியில் தலைவர்களை சந்திக்கும் தேதி வருகிற 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை இருக்கும். இதில் தாங்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என கையெழுத்திட்டு அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் நாராயணசாமி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறும்போது, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நான் டெல்லிக்கு செல்கிறேன்.வருகிற திங்கட்கிழமை (23-ந்தேதி) பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.