Home -> News -> பிரதமர் மோடி – சீன அதிபர் 11-ம் தேதி வருகை: மாமல்லப்புரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு

பிரதமர் மோடி – சீன அதிபர் 11-ம் தேதி வருகை: மாமல்லப்புரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு

பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லப்புரத்திற்கு வருவதையொட்டி, சென்னை, காஞ்சிபுரம் முழுவதும், உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், சந்திக்க உள்ளனர். இதற்காக, ஜி ஜின்பிங், 11ம் தேதி, மதியம், 1:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின் 1:45க்கு, கிண்டியில் உள்ள, ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஓட்டலுக்கு செல்கிறார். ஓய்வுக்கு பின், மாலை, 4:00க்கு மாமல்லபுரம் செல்கிறார்; 5:00 மணிக்கு, அர்ச்சுனன் தபசு பகுதியை பார்வையிடுகிறார். மாலை, 5:20க்கு, ஐந்து ரதம் பகுதிக்கு செல்கிறார். 5:45க்கு கடற்கரை கோவிலுக்கு செல்கிறார்.

முக்கிய பிரமுகர்கள் சந்திப்புக்கு பின், இரவு, 9:00க்கு, கிண்டி, ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஓட்டலுக்கு திரும்புகிறார். 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு மாமல்லபுரம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய பின், மதியம், 1:15க்கு, சென்னை விமான நிலையத்திற்கு திரும்புகிறார். ஜி ஜின்பிங் மற்றும் மோடி இருவரின் வருகையை ஒட்டி சென்னைக் விமானநிலையத்தில் பயணியர் மற்றும் சரக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் சந்திக்கும் இடங்கள், தங்கும் ஹோட்டல், மற்றும் மாமல்லபுரத்தில் வரும் சாலைகளில், வெடிகுண்டு நிபுணர்கள் 5 குழுக்களாக பிரிந்து, மோப்பநாய் உடன், பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், சென்னை முதல் மாமல்லபுரம் வரை மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சீன உளவுத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.