Home -> News -> Sports -> ஆண்டர் ரஸளின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அபார வெற்றி!

ஆண்டர் ரஸளின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அபார வெற்றி!

பெங்களூருவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட 206 ரன்களை 19.1 ஓவர்களில் எடுத்து கொல்கத்தா அணி வெற்றி!

இந்த சீசனில் பெங்களூர் அணி தொடர்ந்து தன் 5வது போட்டியில் தோல்வி அடைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் 205 ரன்கள் குவித்தும், மட்டமான பந்துவீச்சால் தோல்வி அடைந்தது பெங்களூர். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு பார்த்திவ் பட்டேல் 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து நிதான துவக்கம் அளித்தார். பின்னர், கோலி – டி வில்லியர்ஸ் இணைந்து கொல்கத்தா பந்துவீச்சை தெறிக்கவிட்டனர்.

இருவரும் 2வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தனர். கோலி 49 பந்துகளில் 84 ரன்கள், டி வில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தனர். கடைசி நேரத்தில் ஸ்டாய்னிஸ் 13 பந்துகளில் 28 ரன்கள் குவிக்க, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 205 ரன்களை எட்டியது. கொல்கத்தா அணியில் ஏழு பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். சுனில் நரைன், ராணா, குல்தீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். வேகப் பந்துவீச்சாளர்கள் பிரசித் கிருஷ்ணா, பெர்குசன், ரஸ்ஸல் ரன்களை வாரி இறைத்தனர்.

கொல்கத்தா அணி இமாலய இலக்காக 206 ரன்களை எட்டுமா என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. ஆனால், பெங்களூர் அணியின் பந்துவீச்சில் நிறைய ஓட்டைகள் இருந்தன. கொல்கத்தாவின் பேட்டிங்கில் துவக்க வீரர் சுனில் நரைன் 10 ரன்களில் வெளியேறினார். அதன் பின் கிறிஸ் லின் 43, ராபின் உத்தப்பா 33 ரன்கள் எடுத்தனர். இவர்கள் ரன் ரேட் 9ஐ ஒட்டி இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். அடுத்து நிதிஷ் ராணா 23 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்.

இடையே தினேஷ் கார்த்திக் 15 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசியாக நின்ற ஆண்ட்ரே ரஸ்ஸல், எப்போதும் போல தன் அதிரடியைக் காட்டினார். 18வது ஓவரில் 3 சிக்ஸர்கள் அடிக்க, அந்த ஓவரில் 23 ரன்கள் கிடைத்தது. கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் கிடைத்தால் வெற்றி என்ற நிலையில், டிம் சௌதி வீசிய 19வது ஓவரில் ரஸ்ஸல் 29 ரன்கள் சேர்த்தார். ஒரு ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட நான்கு சிக்ஸர்கள், ஒரு ஃபோர் அடித்தார் ரஸ்ஸல். கடைசி ஓவரின் முதல் பந்தில் ஷுப்மன் கில் ஒரு ரன் எடுக்க கொல்கத்தா அணி இமாலய இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.