Home -> News -> Sports -> ஆசியகோப்பை கிரிக்கெட் 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது இந்திய அணி

ஆசியகோப்பை கிரிக்கெட் 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது இந்திய அணி

ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று முடிவடைந்தது. இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மற்றும் வங்கதேச அணிகள் விளையாடியது. இந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிதன்தாஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அணியின் ஸ்கோரை உயர்த்திய லிதன் தாஸ் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மெஹிதி ஹசன் 32 ரன்களும், சவும்யா சர்க்கார் 33 ரன்களும் சேர்த்தனர். வங்கதேச அணி 48.3 ஓவர்களில் 222 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 48 ரன்களும், ஷிகர் தவான் 15 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

தினேஷ் கார்த்திக் 37 ரன்களும், தோனி 36 ரன்களும் எடுத்தனர். வெற்றி இலக்கை அடைவதற்காக புவனேஸ்குமார், ஜடேஜா ஜோடி ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசி ஓவரில் 6 பந்துகளில் 6 ரன் எடுக்க வேண்டியிருந்ததால் பரபரப்பு அதிகமானது. 23 ரன்கள் எடுத்த கேதர் ஜாதவ் நிதானமாக விளையாடி கடைசிப் பந்தில் இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

7 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணிக்கு ஆசியக் கோப்பை வழங்கப்பட்டது. பல்வேறு நகரங்களிலும் இந்திய அணி பெற்றதை ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.