Home -> News -> Sports -> ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3வது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா – ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. பின்னர் நடைபெற்ற 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றது. 71 ஆண்டுகளில் முதன்முறையாக தொடரை கைப்பற்றியது. ஆஸியில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் இந்திய, ஆசிய கேப்டன் என்ற சிறப்பை கோலி பெற்றார். இந்நிலையில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் மெல்போர்னில் இன்று தொடங்கியது. மழையால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினார்கள்.

இதன்மூலம் 48.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலிய அணி. சாஹல் 6, புவனேஸ்வர் 2, ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி இந்த ஆட்டத்தையும் தொடரையும் வெல்ல நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார்கள். பின்னர் இந்திய அணி ஆட்டத்தை தொடங்கியது, ரோஹித் சர்மா, 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு பவுண்டரியும் நடிக்காமல் 46 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த தவன், ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த கோலியும் தோனியும் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். இருவரும் 74 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்கள். பிறகு இந்தமுறையும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 46 ரன்களில் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

எனினும் தோனி ஆரம்பத்தில் தடுமாற்றத்துடன் விளையாடினாலும் (ஒரு கேட்சையும் ரன் அவுட்டையும் ஆஸி. வீரர்கள் தவறவிட்டார்கள்) பிறகு அணியின் இன்னிங்ஸை வழிநடத்தினார். அவர் 74 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். கடந்த வருடம் ஒரு அரை சதம் கூட எடுக்காத தோனி, இந்தத் தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் எடுத்துள்ளார். 49.2 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. தோனி 87 ரன்களுடனும், கேதர் ஜாதவ் சிறப்பாக ஆடி 57பந்துகளில் 61ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய 2-1 என்ற கணக்கில் ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*