Home -> News -> Sports -> 5வது ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா.

5வது ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியவர்களில், கீரன் பவல் டக் அவுட் ஆகி வெளியேற, பின்னர் வந்த சாய் ஹோப்பும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அந்த அணி ரன் எடுக்க முடியாமல் திணறியதுடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த வண்ணம் இருந்தது. ரோவ்மன் பவல், மார்லன் சாமுவேல்ஸ், ஹோல்டர் தவிர மற்ற அனைவரும் ரன் எதுவும் எடுக்காமலும், ஒற்றை இலக்க ரன்னிலும் அவுட்டாகினர். ரவீந்திர ஜடேஜா அபாராமாகப் பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.

இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 104 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடத் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஷிகார் தவான் 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஆனால் ரோகித் சர்மா மற்றும் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெறச் செய்தனர். ரோகித் சர்மா அரைசதம் அடித்தார்.

14.5 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3க்கு1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.