Home -> News -> Sports -> பிருத்வி ஷா, ரிஷப் பந்த் அதிரடி பேட்டிங் த்ரில் வெற்றி பெற்றது டெல்லி

பிருத்வி ஷா, ரிஷப் பந்த் அதிரடி பேட்டிங் த்ரில் வெற்றி பெற்றது டெல்லி

பிருத்வி ஷா, ரிஷப் பந்த் அதிரடி பேட்டிங் காரணமாக பரபரப்பான கடைசி ஓவரில் ஹைதராபாத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று த்ரில் வெற்றி பெற்றது டெல்லி.

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் ஒரு பகுதியாக டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையிலான எலிமினேட்டர் ஆட்டம் (வெளியேறும் சுற்று) விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு நடைபெற்றது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது ஹைதராபாத். 163 ரன்கள் வெற்றி இலக்குடன் டெல்லி தரப்பில் களமிறங்கிய ஷிகர் தவன்-பிருத்வி ஷா ஆகியோர் தொடக்கம் முதலே அடித்து ஆடியதால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

2 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 56 ரன்களை விளாசிய பிருத்வி ஷா, கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரிஷப் பந்தின் வான வேடிக்கை தொடர்ந்தது. பசில் தம்பி வீசிய 18-வது ஓவரில் 21 ரன்களை விளாசினார். வெற்றிக்கு மிக அருகில் அழைத்து வந்த ரிஷப் பந்த் 5 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 49 ரன்களை எடுத்து புவனேஸ்வர் பந்தில் ஆட்டமிழந்தார். 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்து த்ரில் வெற்றி பெற்றது டெல்லி. வெள்ளிக்கிழமை நடைபெறும் குவாலிபையர்-2 ஆட்டத்தில் டெல்லி – சென்னை அணிகள் மோதுகின்றன.