Home -> News -> Sports -> ஐபிஎல் டிக்கெட் வாங்குவதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த ரசிகர்கள்

ஐபிஎல் டிக்கெட் வாங்குவதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 23 ஆம் தேதி நடக்கவிருக்கும் சென்னை- பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் லீக் முதல் போட்டிக்கான ‘டிக்கெட்’ விற்பனை இன்று துவங்கவுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இது ஐபிஎல் T20 தொடர் 12வது சீசன் ஆகும். சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள இந்த முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான ‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று மார்ச் 16 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை பெறுவதற்கு நள்ளிரவு முதலே சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான கவுன்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர்.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளம் மூலமாகவும், நேரடி கவுன்டர் மூலமாகவும் இன்று காலை 11:30க்கு தொடங்குகிறது. 1500 ரூபாய் முதல், 6500 ரூபாய் வரை அங்கு டிக்கெட்களின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், இந்த தொடரில் பேட்ஸ்மேன் சிக்சர் அடிக்கும் பந்தினை மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் ஒரு கையில் கேட்ச் பிடித்தால், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்குவதற்காக காத்திருக்கின்றனர்.