Home -> News -> Sports -> 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

2-வது ஒருநாள் ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.

முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை. பேட்டிங்குக்குச் சாதகமான மெளண்ட் மெளன்கனி மைதானத்தில் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மாவும் தவனும் 25.2 ஓவர்களில் 154 ரன்கள் குவித்தார்கள். தவன் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 87 ரன்களுக்கு ஃபெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

30-வது ஓவரின் போது இந்திய அணியின் ஸ்கோர் 172 என இருந்தபோது அவர் வெளியேறினார். நல்ல நிலைமையில் இருந்ததால் அதன்பிறகு விராட் கோலியும் ராயுடுவும் இணைந்தனர். விராட் கோலி 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு 49 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து 46-வது ஓவரில் ஆட்டமிழந்தார் ராயுடு.

எனினும் கடைசிக்கட்டத்தில் தோனியும் ஜாதவும் அதிரடியாக விளையாடி ஒரு நல்ல ஸ்கோரை இந்திய அணிக்கு உருவாக்கிக் கொடுத்தார்கள். இருவரும் 26 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். தோனி 33 பந்துகளில் 48 ரன்களும் ஜாதவ் 10 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தார்கள். இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது. இதனால் இந்த ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து களிமிறங்கிய நியூசிலாந்து அணியின் கப்திலை 15 ரன்களில் வெளியேற்றினார் புவனேஸ்வர். அட்டகாசமான ஸ்டிரோக்குகளால் அசத்திய வில்லியம்சன் 2 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்து துரதிர்ஷ்டவசமாக 20 ரன்களில் ஷமி பந்துவீச்சில் போல்ட் ஆனார். இரு விக்கெட்டுகள் விழுந்தபின்னும் ஓரளவு அதிரடியாக ஆடிவந்த மன்ரோ, ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றபோது தடுமாறி சாஹல் பந்துவீச்சில் 31 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போதே இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது.

மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யும் தோனி, இன்றும் அதுபோலொரு மின்னல் வேக ஸ்டம்பிங் மூலமாக டெய்லரை 22 ரன்களில் வெளியேற்றினார். காலை லேசாக அவர் தூக்கியபோது அதைப் பயன்படுத்திக்கொண்டு ஸ்டம்பிங் செய்து அசத்தினார் தோனி. லதம், 34 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் இன்றும் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தினார். கிராண்ட்ஹோம் 3 ரன்களிலும் நிகோல்ஸ் 28 ரன்களிலும் சோதி ரன் எதுவும் எடுக்காமலும் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள்.

சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு நியூஸிலாந்தின் நடுவரிசை வீரர்களைத் திணறடிக்கச் செய்யும் கோலியின் திட்டத்துக்கு இன்றும் வெற்றி கிடைத்தது. 166 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் திடீரென ஒரு நல்ல கூட்டணி நியூஸி. அணிக்கு அமைந்தது. பிரேஸ்வெல்லும் ஃபெர்குசனும் இந்திய அணியின் பந்துவீச்சைத் திறமையாக எதிர்கொண்டார்கள். பிரேஸ்வெல் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து புவனேஸ்வர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 9-வது விக்கெட்டுக்கு இருவரும் 58 ரன்கள் எடுத்தார்கள். இதனால் இந்திய அணியின் வெற்றி சற்று தாமதமானது.

கடைசியில் நியூஸிலாந்து அணி, 40.2 ஓவர்களில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியப் பந்துவீச்சாளர்களில் குல்தீப் 4 விக்கெட்டுகளையும் சாஹல், புவனேஸ்வர் தலா 2 விக்கெட்டுகளையும் ஷமி, ஜாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். ஆட்ட நாயகன் விருது ரோஹித் சர்மாவுக்குக் கிடைத்தது. 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 3-வது ஒருநாள் ஆட்டம், இதே மைதானத்தில் திங்கள் அன்று நடைபெறவுள்ளது.