Home -> News -> Sports -> ஆசியக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது வங்கதேசம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது வங்கதேசம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ள வங்கதேச அணி, இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

அபுதாபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், முஷ்பிகர் ரஹிம், முகமது மிதுன் ஜோடி நிலைத்து நின்று 4வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்தனர்.

முகமது மிதுன் 60 ரன்களும், முஷ்பிகர் 99 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி 48.5 ஓவரில் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணியின் ஜூனைத் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் இமாம் உல்ஹக் அதிகபட்சமாக 83 ரன்கள் குவித்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் அந்த அணியால 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

37 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றதால், ஆசிய கோப்பையில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியது. நாளை நடைபெறவுள்ள இறுதி போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை எதிர்கொள்கிறது.