" /> My Title page contents
Home -> News -> Sports -> இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

 

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி, முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இலங்கையுடன், 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது தென் ஆப்பிரிக்கா. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், இலங்கை வெற்றி பெற்ற நிலையில், ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. துவக்கத்திலேயே தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் ரபடா மற்றும் நிகிடியிடம் இலங்கை வீரர்கள் மளமளவென வீழ்ந்தனர். டிக்வெல்லா, மெண்டிஸ், கேப்டன் மேத்தியூஸ், ஜெயசூரியா, தரங்கா என முக்கிய வீரர்களை இழக்க, 8.5 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 36 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை.

ஆனால், குசால் பெரேரா மற்றும் திசாரா பெரேரா ஜோடி சேர்ந்து அசத்தலாக விளையாடி 6வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தனர். குசால் அரைசதம் விளாசி 81 ரன்கள் அடிக்க, திசாரா 49 ரன்களில் வீழ்ந்தார். 34.3 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை. தென் ஆப்பிரிக்காவின் ரபடா மற்றும் ஷம்சி தலா 4 விக்கெட்களை எடுத்தனர்.

சிறிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவின் துவக்க வீரர் ஆம்லா 19 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த மார்க்ரம் டக் அவுட்டானார். ஆனால், டி காக்(47) மற்றும் டு பிளேஸிஸ்(47) நிதானமாக விளையாடி 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். தொடர்ந்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் டுமினி(53), வெறும் 32 பந்துகளில் அரைசதம் விளாசி வெற்றியை உறுதி செய்தார். 31 ஓவர்களிலேயே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிகா.

இதனால், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.