Home -> News -> Sports -> மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இப்போது நடந்து வருகிறது. முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்தப் போட்டி யாரும் எதிர்பாராத வகையில் சமனில் முடிவடைந்தது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, இந்த இரண்டு போட்டியிலும் சதம் அடித்து மிரட்டினார்.

இந்நிலையில் 3-வது ஒரு நாள் போட்டி புனேவில நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது.

தொடர்ச்சியாக 3-வது முறையும் இப்போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்துவாரா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி ரசிகர்களை ஏமாற்றாமல் விராட் கோலி இந்த முறையும் சதம் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் உடன் இந்தியா மோதிய கடைசி ஒருநாள் தொடரிலும் விராட் கோலி சதம் அடித்து சாதனை புரிந்திருந்தார். தற்போதும் வெஸ்ட் இண்டீஸ் உடன் தொடர்ச்சியாக 3 ஒருநாள் தொடரில் சதம் அடித்து விளாசியது மூலம், எதிரணியுடன் ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 4 முறை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி புரிந்தார்.

விராட் கோலி சதம் அடித்திருந்தாலும் மற்ற வீரர்கள் அனைவரும் இந்த போட்டியில் பெரிதாக ஜொலிக்கவில்லை. விராட் கோலியே தனி ஆளாக வெற்றிக்கு போராடி வந்தார். இருப்பினும் 107 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 35 ரன்களும், ரிஷப் பண்ட் 24 ரன்கள், அம்பத்தி ராயுடு 22 ரன்கள், குல்தீப் யாதவ் 15 ரன்கள் எடுக்க மற்றவர்கள் யாரும் 10 ரன்களை தாண்டவில்லை. 47.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி இப்போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் தனி ஆளாக போராடிய விராட் கோலியின் சதமும் வீணானது.

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது, இந்தியா 1 வெற்றியும், வெஸ்ட் இண்டீஸ் 1 வெற்றியும் பெற்றுள்ளன. 1 போட்டி சமனில் முடிந்துள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.