" /> My Title page contents
Home -> News -> சென்னை எஸ்.எஸ்.எம். பள்ளி தாளாளர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சென்னை எஸ்.எஸ்.எம். பள்ளி தாளாளர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சென்னையைச் சேர்ந்த பள்ளித் தாளாளர் சந்தானம் மாணவர்களிடம் அடுத்த கல்வியாண்டுக்காக ரூ.2 லட்சம் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டுமென்று கூறிய விவகாரத்தில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

சென்னையில் குரோம்பேட்டை, பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் ஸ்ரீமதி சுந்தரவள்ளி நினைவு (எஸ்.எஸ்.எம்) சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் தாளாளராக இருந்து வருகிறார் சந்தானம். இவர், சமீபத்தில் இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கான வைப்புத் தொகையாக ரூ.2 லட்சம் கட்ட வேண்டுமென்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சிட்லபாக்கம் மற்றும் பீர்க்கன்கரணை காவல் நிலையங்களில் சந்தானம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கும் இது தொடர்பாகப் புகார் அனுப்பியுள்ளனர் மாணவர்களின் பெற்றோர்.

நேற்று (ஜுலை 24) குரோம்பேட்டை பள்ளியில் நடந்த காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவரிடையே பேசினார் சந்தானம். அப்போது, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களைப் பணம் கட்ட இயலாதவர்கள் என்று அவர் கூறியதாகத் தகவல் வெளியானது. இதனால், இன்று (ஜூலை 25) காலையில் மீண்டும் மாணவர்களின் பெற்றோர் குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் நீண்டதால் மோதல் உண்டானதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் காவல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இதனால், பள்ளித் தாளாளர் சந்தானம் அங்கிருந்து தப்பிச் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற போலீசார், நெடுங்குன்றம் அருகே அவரைக் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட இரு பள்ளிகளுக்கும் நாளை முதல் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுவதாக மாணவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது.