Home -> News -> Tamilnadu Politics -> கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு 20 சதவித ஊதிய உயர்வு – முதலமைச்சர் பழனிசாமி

கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு 20 சதவித ஊதிய உயர்வு – முதலமைச்சர் பழனிசாமி

கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கிப் பணியாளர்களுக்கான ஊதியத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர்த்தி அறிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து தீர்மானிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுவினர் கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுக்களை நடத்தியது. . புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததால் 23 மத்தியக் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் 17,000 பேருக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு 3 ஆண்டுகளாக கிடைக்கவில்லை.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் அக்டோபர் 24 ஆம் தேதி கூட்டுறவு வங்கிகள் முன் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து 30 ஆம் தேதி தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 20 சதவீதம் ஊதிய உயர்வை முதல்வர் பழனிசாமி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டுறவு துறை அலுவலர்கள் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 20 சதவீத ஊதிய உயர்வும், பணியாளர் கூட்டுறவு கடன், சிக்கன நாணயச்சங்க ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வால் 22,048 பேர் பயன்பெறுவார்கள் என்றும், இதற்காக 143.72 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.