Home -> News -> Tamilnadu Politics -> மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் நடிகை கோவை சரளா

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் நடிகை கோவை சரளா

மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இக்கூட்டத்தில் நடிகை கோவை சரளா தன்னை மக்கள் நீதி மய்யத்தில் இணைத்துக் கொண்டார்.

அக்கூட்டத்தில் நடிகை கோவை சரளா பேசியதாவது: தமிழ்நாட்டில் பல கட்சிகள் உள்ளன. ஆனால், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பல சாதனைகள் செய்திருக்கிறார் கமல் சார். இத்தனை ஆண்டுகாலம் எனக்கு நீங்கள் உறுதுணையாக இருந்தீர்கள். இப்போது உங்களுக்கு சேவை செய்வதற்காக நான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து என்னத்த கிழிப்பார்கள் என்றார்கள். சினிமாவில் நடித்தால் மட்டுமே, ஒரு மனிதனின் உண்மையான மனோநிலையைப் புரிந்து கொள்ள முடியும். பிச்சைக்காரராக நடித்தால் அதன் மனநிலை என்ன என்பதை உணர முடியும். ஆகையால், தமிழக மக்கள் மனநிலை என்ன என்பது எங்களுக்குத் தெரியாதா? நன்றாகத் தெரியும். தலைவர் கமல் நடிப்பு வேலையைப் பார்த்தது போதும், இந்த வேலையைப் பார் என்று உத்தரவிட்டதால் வந்துவிட்டேன். முன்பு, தலைவருக்கு ஒரு வார்த்தை கொடுத்திருந்தேன். “நீங்கள் எந்த சூழ்நிலையிலும், எந்த இடத்துக்குப் போனாலும் அங்கு உங்கள் பின்னால் நாங்கள் பல பேர் இருப்போம்” என்று சொல்லியிருந்தேன். ஆகையால், தான் இப்போது அவர் நடக்கும் பாதையிலே, நாங்கள் பின்னால் செல்லத் தயாராகவுள்ளோம். இவ்வாறு கோவை சரளா பேசினார்.