Home -> News -> Tamilnadu Politics -> சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 13-ம் தேதி விருப்ப மனு அளிக்கலாம் – அதிமுக அறிவிப்பு

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 13-ம் தேதி விருப்ப மனு அளிக்கலாம் – அதிமுக அறிவிப்பு

மக்களவை பொதுத்தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதன்படி, தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது. மக்களவை பொதுத்தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதியே நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 13-ம் தேதி விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் 18-ம் தேதி 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அதிமுக வேட்பாளராகப் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 13-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரத்தை அதிமுக தலைமைக் கழகத்தில் செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.13-ம் தேதி மாலையே (புதன்கிழமை) விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும். திருவாரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஏற்கெனவே விருப்ப மனு பெறப்பட்டுள்ளதால் அதற்கு விருப்ப மனு அளிக்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.