Home -> News -> Tamilnadu Politics -> அதிமுக., – தேமுதிக., இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!

அதிமுக., – தேமுதிக., இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!

அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.. தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது!

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் தேமுதிவுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஆழ்வார்பேட்டையிலுள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதிஷ் ஆகியோர் சென்றனர்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார்.

அதிமுகவுடன் கூட்டணி இயற்கையானது! வெற்றிக் கூட்டணியான இக் கூட்டணி அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் தொடரும்! நாளை நமதே! நாற்பதும் நமதே!! எண்களில் ஒன்றும் கிடையாது, எண்ணங்களில் தான் எல்லாம் இருக்கிறது! அதிமுக எம்பிக்கள் குறித்து நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், அதிமுக – தேமுதி கூட்டணி ஒரு வெற்றிக்கூட்டணி! நாளை நமதே, நாற்பதும் நமதே எனும் வகையில் இந்த கூட்டணி வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும், அதன் பிறகும் கூட்டணி தொடரும் என்று கூறினார் அவர்.

கூட்டணி ஒப்பந்தம் குறித்து குறிப்பிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக – தேமுதிக கூட்டணி என்பது உணர்வுப்பூர்வமானது! வேட்புமனு தாக்கலுக்கு முன் தேமுதிகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என அறிவிக்கப்படும்… என்று கூறினார்.

முன்னதாக, பிரேமலதா விஜயகாந்த் கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூறியிருந்தார்.