Home -> News -> Tamilnadu Politics -> திமுகவும், அதிமுகவும் 50 ஆண்டுகளாகத் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துதான் வருகின்றன – கமல்ஹாசன்

திமுகவும், அதிமுகவும் 50 ஆண்டுகளாகத் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துதான் வருகின்றன – கமல்ஹாசன்

பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், இந்திய குடியரசு கட்சி கூட்டணி வைத்து போட்டியிட போவதாக அக்கட்சியின் செ.கு.தமிழரசன் அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியிலும், இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்தில் இந்திய குடியரசு கட்சி போட்டியிடும் என அறிவித்தார் இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதனிடையே, பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடுகிறார்.

இந்திய குடியரசுக் கட்சியுடனான கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கமல் கூறியது: காங்கிரஸ், பாஜக இல்லாத மூன்றாவது அணிக்கான வாய்ப்பை இந்திய மக்கள் ஏற்படுத்த வேண்டும். எங்களின் தேர்தல் பிரசாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம். அவர் முதல்வர் என்பதால் நேரம் கிடைக்கும்போது வருவார். பிரபலங்களும், பிரபலங்களாக உள்ளவர்களும் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட உள்ளனர்.

திமுகவும், அதிமுகவும் 50 ஆண்டுகளாகத் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துதான் வருகின்றன. இரண்டு கட்சிகளின் கூட்டணி எவ்வளவு முரண்பாடாக இருக்கிறதோ அதைபோல் அவர்களின் தேர்தல் அறிக்கைகளும் உள்ளன. ராமநாதபுரம் தொகுதியில் நீங்கள் போட்டியிடுகிறீர்களா என்று கேட்டதற்கு, உங்களின் ஆசைக்கும், வாழ்த்துக்கும் நன்றி என்றார். இன்று வேட்பாளர் அறிவிப்பு: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை மதியம் 2 மணியளவில் கமல் வெளியிட உள்ளார்.