Home -> News -> Tamilnadu Politics -> தமிழகத்தில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் : மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் : மு.க.ஸ்டாலின்

தருமபுரி மாவட்டம், அரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சின்னாங் குப்பத்தில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், கட்சியின் மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியது : சட்டப் பேரவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 சட்டப் பேரவை உறுப்பினர்கள், அ.தி.மு.க. அரசுக்கு கட்சிக்கு எதிராக வாக்களித்தது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் விரைவில் தீர்ப்பு வரவுள்ளது.

இந்தத் தீர்ப்பு வந்தவுடன், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நிச்சயம் கவிழும். அடுத்தப்படியாக அதிக சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கொண்ட தி.மு.க. ஆட்சி அமைக்க உரிமை கோராது. மாற்றாக, தமிழகத்தில் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்துவோம். தமிழகத்தில் அடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தலில், கடந்த 1971-இல் தி.மு.க. 184 சட்டப் பேரவை உறுப்பினர்களுடன் ஆட்சி அமைத்தது. அதைக் காட்டிலும், இனி வரும் தேர்தலில் தி.மு.க. அதிக உறுப்பினர்களுடன் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வெளியாகிவிடும். எனவே, தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் அனைத்து வாக்காளர்களையும் நேரில் சந்திக்க வேண்டும். வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அண்மையில் அடிக்கல் நாட்டு விழா நடந்துள்ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அரசு, கடந்த நான்கரை ஆண்டுகள் இந்தத் திட்டத்தைத் தொடங்காமல், ஆட்சி முடியும் நேரத்தில் தொடங்கியிருப்பது ஒரு நாடகமாகும்.

பிரதமர் மோடி, கருப்புப் பணத்தை மீட்டு வங்கிக் கணக்குகளில் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்வதாகக் கூறினார். இதுநாள் வரையில் ரூ.15 கூட வங்கிக் கணக்கில் வந்ததாகத் தெரியவில்லை. எனவே, தி.மு.க. தொண்டர்கள் மக்களவைத் தேர்தல், இடைத் தேர்தல், சட்டப் பேரவை பொதுத் தேர்தல் எதுவாக இருந்தாலும், யார் வேட்பாளராக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே இலக்குடன் தேர்தல் களப் பணியாற்ற வேண்டும் என்றார்.