" /> My Title page contents
Home -> News -> Tamilnadu Politics -> சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் 27-ந் தேதி ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் 27-ந் தேதி ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற 27-ந் தேதி(வெள்ளிக்கிழமை) தி.மு.க. சார்பில் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இது குறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரியை திடீரென்று உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு மக்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்து இருக்கிறது.

ஊழலில் ஊறித் திளைக்கும் அ.தி.மு.க அரசு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்தாமல் இருப்பதால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.3,500 கோடிக்கும் மேற்பட்ட நிதி இன்னமும் பெறப்படாமல் உள்ளது.

மத்திய அரசின் மானிய உதவி தொகைகளை பெற்று உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தாமல் வாடகைதாரர்கள், வணிகப் பெருமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கும் வண்ணம் சொத்து வரியை உயர்த்தி மக்களை சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது ஆளும் அ.தி.மு.க. அரசு.

எனவே, கடுமையான இந்த சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும், அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் முன்பு வருகின்ற 27-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகரச் செயலாளர்கள் மற்றும் நகரச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.