" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு 3 வது நாளாக குளிக்க தடை

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு 3 வது நாளாக குளிக்க தடை

குற்றாலம் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப் பெருக்கு நீடிப்பதால் 3வது நாளாக மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டது.

குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் மிகவும் அருமையாக உள்ளது. சீசன் துவங்கிய கடந்த மே மாத இறுதி முதல் இன்றுவரை தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. மலைப் பகுதிக்குள் கன மழை நீடித்தது.

இதனால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கடந்த 7 ம் தேதி மதியம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால்அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் ஐந்தருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. 8ம் தேதி காலையில் வெள்ளப் பெருக்கு குறைந்ததும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மாலையில் மீண்டும் வெள்ளப் பெருக்கு காரணமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

நேற்று அதிகாலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்தது. அதனால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அவர்கள் சிற்றருவி, புலியருவி சென்று குளித்து ஆறுதல் அடைந்தனர்.

தொடர் மழை காரணமாக செங்கோட்டை குண்டாறு அணை, அடவிநயினார் அணை ஆகியவற்றிற்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த அணைகள் ஏற்கனவே நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் தண்ணீர் மறுகால் வழியே வெளியேறியது.
கேரள மாநிலம் தென்மலை பாலருவியிலும் வெள்ளப் பெருக்கு காரணமாக அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.