" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> கல்லணையில் இருந்து காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு நொடிக்குப் 17 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

கல்லணையில் இருந்து காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு நொடிக்குப் 17 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

கல்லணையில் இருந்து காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு நொடிக்குப் பதினேழாயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரிப் பாசன மாவட்டங்களுக்காகக் கடந்த 19ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்துவிட்டார். நொடிக்கு இருபதாயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் நேற்று திருச்சி முக்கொம்புக்கு வந்தடைந்தது. அங்கிருந்து திறக்கப்பட்ட நீர் கல்லணையை வந்தடைந்தது. இதையடுத்து இன்று கல்லணையில் இருந்து காவிரிப் பாசன மாவட்டங்களுக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர்கள் துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன், காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பொத்தானை அழுத்தி மதகுகளைத் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களும் கலந்துகொண்டனர். தொடக்கத்தில் காவிரியாற்றில் ஏழாயிரம் கன அடி, வெண்ணாற்றில் ஏழாயிரம் கனஅடி, கல்லணைக் கால்வாயில் ஆயிரம் கன அடி, கொள்ளிடம் ஆற்றில் இரண்டாயிரம் கன அடி என மொத்தம் நொடிக்கு 17ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

திறக்கப்பட்டுள்ள தண்ணீர் கடைமடைப் பகுதிகளுக்குச் சென்றுசேரும் வரை முறைப்பாசனம் வைக்காமல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல ஆண்டுகளாகச் சம்பா, குறுவை, தாளடி என மூன்று பருவங்களிலும் நெல் பயிரிட முடியாமல் போன நிலையில் இப்போது அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.