" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> திரைப்படங்களில் நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது நடிகை கவுதமி

திரைப்படங்களில் நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது நடிகை கவுதமி

திரைப்படங்களில் உச்சத்தைத் தொட்ட நடிகராக இருந்தாலும், புகை பிடிக்கும் காட்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 21ஆம் தேதி விஜய்யின் 62ஆவது படமான சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில், விஜய் புகை பிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. பல்வேறு அமைப்பினர், கட்சியினர் அதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதற்கு பாமக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து படத்தில் விஜய் புகை பிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், தமிழக அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து சர்கார் படத்தின் போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதன் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கியது.

இதில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பலர் ஆதரவு தெரிவித்தனர். அதில் குறிப்பாக சிம்பு மற்றும் அவரது தந்தை டி.ராஜேந்தர் தொடர்ந்து இது பற்றி கருத்து கூறி வருகிறார். மேலும் இது தொடர்பாக சமீபத்தில் கருத்து தெரிவித்த விஜய் சேதுபதிக்கு பாமகவின் பசுமைத் தாயகம் சார்பாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று (ஜூலை 21), புற்றுநோயில் இருந்து மீண்டவர்களைக் கவுரவிக்கும் வகையில், ‘வாழ்க்கையைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை கவுதமி மற்றும் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கவுதமி, “சிகரெட் பிடிப்பவர்களால் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. புகை பிடிப்பவர்களைவிட அருகில் உள்ளவர்களுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது” என்று கூறினார். சமீபத்தில் சர்ச்சையான நடிகர் விஜய், புகை பிடிப்பது போல் வெளியான புகைப்படம் பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “திரைப்படங்களில் உச்சத்தைத் தொட்ட நடிகராக இருந்தாலும், புகை பிடிக்கும் காட்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.