" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து கோரி முதல்வர் கடிதம்

லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து கோரி முதல்வர் கடிதம்

 

நாடு முழுவதும் 8வது நாளாக நடைபெற்று வரும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் கடந்த 20ஆம் தேதி முதல் லாரி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் லாரிகள் நிறுத்தப்பட்டு சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இன்றுடன் 8ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூலை 26) மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்குக் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் “அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் கடந்த 20ஆம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ள முதல்வர், இந்தியாவில் அதிக தொழில் வளர்ச்சியும் நகர்புற வளர்ச்சியும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு, லாரிகள் வேலைநிறுத்தத்தால் தமிழக தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதிப்புகளை பட்டியலிட்டுள்ளார்.

“தமிழகத்தில் மட்டும் 4.5 லட்சத்துக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட லாரிகள் இயங்குகின்றன. சுமார் 10 லட்சம் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்த லாரிகளின் போக்குவரத்தை நம்பி உள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பல லட்ச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவுப் பொருட்களைச் சந்தைக்கு அனுப்ப முடியாமல் தேங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் போராட்டம் தொடர்ந்து நீடித்தால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

“எனவே லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து மீண்டும் சீரான போக்குவரத்து தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று மக்களவையில் நேற்று அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின. பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.