Home -> News -> Tamilnadu News -> மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 10.10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டது. இதையொட்டி மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தனர். கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலில் உள்ள குலாளர் மண்டகப் படியில் சுவாமி-அம்மன் எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இன்று இரவு 7 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சிம்ம வாகனத்தில் புறப்படும் சுவாமி-அம்மன் ஆகியோர் 4 மாசிவீதிகளில் எழுந்தருளி உலா வருகின்றனர்.இதைத்தொடர்ந்து தினமும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து அருள்பாலிக்கின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேடர்பறி லீலை வருகிற 12-ந்தேதியும், சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை 13-ந்தேதியும், பட்டாபிஷேகம் 15-ந்தேதியும், திக்கு விஜயம் 16-ந்தேதியும், 17-ந் தேதி திருக்கல்யாண வைபோகமும் அன்று இரவு திருக்கல்யாண கோலத்தில் அம்மன் பூப்பல்லக்கில் திருவீதிஉலா வருதலும் நடைபெறுகிறது.

சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பாக தேரோட்டம் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் பிரமாண்ட தேர்களில் மீனாட்சி சுந்தரேசுவரர் பவனி நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக் கானோர் 2 தேர்களையும் வடம் பிடித்து இழுக்கிறார்கள். அப்போது 4 மாசி வீதிகளிலும் லட்சக்கணக் கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.வருகிற 19-ந்தேதி தேவேந்திர பூஜையுடன் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. சித்திரை திருவிழா தொடங்குவதையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 4 கோபுர வாயில்கள் மற்றும் சித்திரை வீதிகளிலும் பக்தர்கள் வசதிக்காக தகர கூரையுடன் கூடிய நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.