" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> தினகரன் வருகையால் ஆர்.கே.நகரில் கலவரம்

தினகரன் வருகையால் ஆர்.கே.நகரில் கலவரம்

சென்னை,, ஆர்.கே.நகர் தொகுதிக்கு , டிடிவி.தினகரன் எம்.எல்.ஏ வரும்போதெல்லாம் , ரகளையில் ஈடுபடும் ஒரு கும்பல், இந்த முறை கற்களை வீசி , கலவரத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, போலீசார், கலவரத்தில் ஈடுபட்டவர்களை, தடியடி நடத்தி கலைத்தனர்.

ஆர்கே நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு, அதிக வாக்கு வித்தியாசத்தில், டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். ஆளும் கட்சியாக இருந்தாலும், அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதன் தோற்றார். ஆனால், தினகரன் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது, வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதற்காக, 20 ரூபாய் டோக்கன் கொடுத்தனர். தேர்தலுக்கு பின்னர் அந்த டோக்கனை காட்டி 10 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியதாக புகார் எழுந்தது. ஆனால், தினகரன் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறார். 20 ரூபாய் நோட்டை பலர் பத்திரமாக வைத்திருந்து, டிடிவி தினகரன் தரப்பில் இருந்து பணம் வரும் என்று பலர் காத்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

டிடிவி தினகரன் தொகுதிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வரும்போது, 20 ரூபாய் டோக்கன் விவகாரத்தை வைத்து, பொதுமக்கள் போன்று, சில மர்ம கும்பல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், ஆர்.கே நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக டிடிவி தினகரன் அங்கு வந்துள்ளார். அவரது வருகையின் போது சில மர்ம கும்பல் பொதுமக்கள் போர்வையில், 20 ரூபாய் நோட்டை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், டிடிவி தினகரன் எம்எல்ஏ , ஆர் கே நகர் தொகுதி, தண்டையார்பேட்டை, இரட்டை குழி தெருவில் உள்ள தனது சட்டமன்ற அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக , எம்எல்ஏ அலுவலகத்தில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவரின் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். பயனாளிகளும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், டிடிவி தினகரன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுசூதனன் ஆதரவாளர்கள் என சொல்லப்படும் , அதிமுகவினர் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 ரூபாய் நோட்டுக்களை காட்டி முழக்கமிட்டனர். அப்போது, கூட்டத்தில் இருந்து மர்ம நபர்கள், டிடிவி ஆதரவாளர்களின் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், சடசடவென கடைகளை அடைத்தனர். இதனை அடுத்து இரு தரப்பினரும் அங்கு திரண்டதால், திடீர் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவாலி பிரியா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கல்வீசி தாக்கியதில், ஒரு பெண் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர்.

இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி எதிர்ப்பாளர்களை கலைத்தனர். எம்எல்ஏ அலுவலகம் அமைந்துள்ள சாலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. பயனாளிகள் தவிர மற்ற யாரும் அந்த வழியாக அனுமதிக்கப்படவில்லை. அதன்பின்னர் எம்எல்ஏ தினகரன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.