" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வலியுறுத்தி வரும் 20ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனத் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று (ஜூலை 14) கோவையில் நடைபெற்றது. அதில், வரும் 20ஆம் தேதி முதல் அகில இந்திய லாரிகள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாவட்டத்தில் மட்டும் 75 ஆயிரம் லாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் குமாரசாமி கூறுகையில், மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 20ஆம் தேதி காலை 6 மணி முதல் 4 லட்சத்துக்கு மேற்பட்ட லாரிகள் ஓடாது. இந்தப் போராட்டத்துக்கு டேங்கர் லாரி, கன்டெய்னர் லாரி, மினி ஆட்டோ உரிமையாளர்களும் ஆதரவு தர உள்ளார்கள்.

மேலும், தங்களுக்கு ஆதரவாக 20ஆம் தேதி ஒருநாள் மட்டும் பொதுமக்கள் வாகனங்களை இயக்காமல் ஆதரவு தர வேண்டும். டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.