" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> லாரி வேலை நிறுத்தம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

லாரி வேலை நிறுத்தம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடி கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூலை 20) முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சரக்கு போக்கு வரத்து தடைபட்டு உள்ளது. காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள், மினிலாரிகள் உள்பட சரக்கு வாகனங்கள சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் நான்கரை லட்சம் கனரக வாகனங்களும், ஒன்றரை லட்சம் மினி வேன்களும் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.. இந்த வேலைநிறுத்தத்தில் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் பங்கு பெறுவதாக அறிவித்துள்ளனர்.

லாரி ஸ்டிரைக் காரணமாக துறைமுகங்களில் நடைபெறும் ஏற்றுமதி, இறக்குமதிப் பணிகள் முடங்கி உள்ளன. மேலும் தொழிற்சாலைகளுக்கு பொருள்கள் ஏற்றிச்செல்வது, காய்கறிகள் ஏற்றுச்செல்வதும் தடைபட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணமாக ரூ.18 ஆயிரம் கோடியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயித்து, ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அகில இந்திய மோட்டார் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதற்கு எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு அளிக்கின்றன. இதில், 65 லட்ச லாரிகள் பங்கேற்கின்றன. இதன் காரணமாக, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வந்து சேராது என்பதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.