" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> எம்.ஜி.ஆர். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து ஆட்சி செய்தார் – கவர்னர் பன்வாரிலால் புரோகித்

எம்.ஜி.ஆர். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து ஆட்சி செய்தார் – கவர்னர் பன்வாரிலால் புரோகித்

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். அரும்பாடு பட்டார். உலக தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்தினார் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டினார்.

உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டு கொடியை பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவரும், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ், சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியஸீனா (ஜேப்பியார் மகள்), முருக பத்மநாபன், எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள் சுதா, முன்னாள் எம்.எல்.ஏ. சமரசம் உள்ளிட்டோரும் குத்துவிளக்கேற்றினர்.

அதைத்தொடர்ந்து பேச்சுப்போட்டி, எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்பட கண்காட்சி நடந்தது. கவிஞர்கள் புலமைப்பித்தன், முத்துலிங்கம், இசையமுது, பூங்குழலி, அசோக், சுப்பிரமணி, ரவிபாரதி மற்றும் கரு.நாகராஜன் ஆகியோர் பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார். ‘மேயர் சைதை துரைசாமியின் 5 ஆண்டு கால பணிகள்’ என்னும் எஸ்.கே.முருகன் எழுதிய ஆய்வு நூலையும், சைதை துரைசாமி தயாரித்த ‘வேர்களுக்கு வெளிச்சம்’ என்ற நூலையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். இதனை முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் கல்வி அமைச்சர் எஸ்.ஆர்.ராதா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது: எம்.ஜி.ஆர். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து ஆட்சி செய்தார். பல்வேறு புதிய மற்றும் உன்னத திட்டங்களை செயல்படுத்தி நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தார். இதுபோன்ற நிர்வாக சாதனைகளால் சாதாரண மக்கள் எம்.ஜி.ஆரை இன்றும் நேசித்து வருகின்றனர். எம்.ஜி.ஆரின் மதிய உணவு திட்டத்தால் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை தற்போது வரையிலும் கணிசமாக குறைந்துள்ளது. இதன்மூலம் பள்ளி கல்வித்துறையில் சாதனை படைக்கும் சிறந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழகமும் இணைந்திருக்கிறது.

உயர்கல்வியில் அவர் கொண்டு வந்த கொள்கைரீதியான மாற்றம் காரணமாக 2 ஆயிரம் கல்லூரிகள் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்டன. துன்பப்படுபவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் பற்றிய அவருடைய கவலை மிகவும் நேர்மையான ஒன்றாக இருந்தது. கர்ணனை பின்பற்றி பெருந்தன்மை மற்றும் இரக்கம் ஆகியவற்றால் ஒரு மாபெரும் கொடை வள்ளலாகவே எம்.ஜி.ஆர். வாழ்ந்து வந்தார். எம்.ஜி.ஆர். அளித்த உதவியால் பலர் வக்கீல்கள், என்ஜினீயர்கள், டாக்டர்கள் மற்றும் அரசியல்வாதிகளாக உருவெடுத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். படங்களில் இல்லாதவர்கள் இல்லாத நிலையை அடையவேண்டும் என்பதையே எடுத்துக்கூறின. நீதி பாட்டுகள் மூலம் அரசியல் தகவல்களை தெரிவித்தார்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். அரும்பாடு பட்டார். உலக தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்தினார். அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்து போடவேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார். எம்.ஜி.ஆர்., மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோர் வாழ்க்கை முழுவதும் சேவையாக செய்து, முன் மாதிரி தலைவர்களாக திகழ்கிறார்கள். அவர்களை வருங்கால தலைமுறை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.