Home -> News -> Tamilnadu News -> அதிக கட்டணம் வசூல் செய்தால் திரையரங்கு உரிமம் ரத்து – அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிக கட்டணம் வசூல் செய்தால் திரையரங்கு உரிமம் ரத்து – அமைச்சர் கடம்பூர் ராஜூ

தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்தால் திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில் நிலையம் எதிரே உள்ள பொது கூட்டுறவு பண்டகசாலையில்(மினி சூப்பர் மார்க்கெட்) பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் முன் தொகை வழங்கும் நிகழச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்கினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது, நிறுத்துவது கூறித்து தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்கும். இது மாநில அரசு கட்டுப்பாட்டில் இல்லை. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் நடத்துவது மட்டுமே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நடிகர் கமலஹாசன் அரசியல் அரிச்சுவடி அறியாமால் காலடி எடுத்து வைக்கிறார். முதலில் அவர் அரசியலை படித்து கொள்ள வேண்டும் என்பது தான் எங்களது அறிவுரை.

மேலும் மு.க.ஸ்டாலின் கூறுவது போல், தமிழகத்தில் எந்த எமர்ஜென்சியும் இல்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் எந்த தொற்று நோய்களும் தமிழகத்தில் பரவலாக காணப்படவில்லை. பருவகால மாற்றத்தின் காரணமாக நோய்கள் வருகிறது. அதற்கு ஏற்ப வருமுன் காப்போம் என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதர துறை செயலாளர், இயக்குநர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட காரணமாக டெங்கு, பன்றி காய்ச்சல் எதுவும் இல்லை, இது போன்ற நேரங்களில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கலாம், ஆனால் மக்களை அச்சுறுத்தி, மக்களிடையே பீதியை ஏற்படுத்த கூடாது. எப்போதுமே மக்களை அச்சறுத்தி, பீதி ஏற்படுத்தி அரசியல் நடத்துவது திமுகவின் வாடிக்கை.

மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள் மாற்று அணிக்க சென்ற காரணத்தினால் இன்றைக்கு தேவையில்லாத இடைத்தேர்தல் வந்துள்ளது. இனி மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களை ஒதுக்கிட்டு உண்மையான விசுவாசிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்து வெற்றி பெறுவோம். 18 எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் விளக்கம் கேட்ட போது அல்லது நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் போது, பேச வந்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. தற்போது அரசியலுக்காக பல்வேறு கதைகளை கூறி வருகின்றனர் என்று கூறிய அமைச்சர், தமிழக அரசு திரையரங்குளில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுத்து முறைப்படுத்தியுள்ளது.

பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க பல்வேறு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஸ்டார் வேல்யூ என்று கூறும் நடிகர்கள் அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று அறிக்கை வெளியிட வேண்டும், இதனால் சிறு பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெரிய பட்ஜெட், ஸ்டார் வேல்யூ என்ற காரணம் காட்டி தீபாவளிக்கு வெளியாகும் எந்த நடிகரின் திரைப்படமாக இருந்தாலும் அதிக கட்டணம் வசூல் செய்தால் சம்பந்தபட்ட திரையரங்கின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசும் அறிவித்துள்ளது. இதனையே சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.