" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய மேல்முறையீட்டு வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய மேல்முறையீட்டு வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய மேல்முறையீட்டு வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.ராஜா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நிலுவையில் இருந்த போது ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு அளிக்கப்பட்ட மனுவை நிராகரித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அனுமதி மறுத்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 354 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படாது. இப்பட்டியலில் தூத்துக்குடி மாவட்டம் இடம்பெறவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களின் பட்டியலில் ஸ்ரீவைகுண்டத்தை சேர்க்கக்கோரி மனு அளிக்கப்பட்டு நிலுவையில் இருப்பதால் இப்போதைய நிலையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று, மனுவை முடித்து வைத்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்து, ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் எம்.எஸ்.ராஜா மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

அதில், தமிழக கலாச்சாரத்துடன் தொடர்புடைய விளையாட்டாக இருப்பதாலும், ஜல்லிக்கட்டு காளைகளால் நாட்டு மாடு இனவிருத்தி ஏற்படுவதாலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் வகையில் காட்சிப்படுத்ப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது. இதை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை.

13 மாவட்டங்களில் மட்டும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிவிட்டு, பிற பகுதிகளுக்கு அனுமதி மறுப்பது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்துக்கு எதிரானது. ஸ்ரீவைகுண்டம் 42 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் அடங்கிய பழமையான பகுதி என்பதை கவனிக்க தனி நீதிபதி தவறிவிட்டார்.

எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.