Home -> News -> மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்

அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, அவரது பிஏவிடம் கடுமையாக திட்டும் ஆடியோ ஒன்று அண்மையில் வெளியாகியது. அதன்பிறகு தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் டிடிவி தினகரன் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அமமுகவை விட்டு விலகும் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் முட்டுக்கட்டை போடுவதாக கூறப்பட்டது.

இதனால் தேனியில் இருந்து சென்னை வந்த தங்க தமிழ்ச்செல்வன் தனக்கு நெருக்கமான அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகளிடம் பேசி வந்தார். இந்த சூழலில் இன்று காலை தங்க தமிழ்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் புறப்பட்டார். அங்கு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இந்த இணைப்பின்போது துரைமுருகன், செந்தில் பாலாஜி உள்பட பலர் இருந்தனர். பல ஆண்டுகளாக அதிமுக கரை வேட்டியுடன் சுற்றிய தங்க தமிழ்செல்வனின் ஆதரவாளர்கள் இன்று அப்படியே திமுகவுக்கு மாறுவது தேனி மாவட்டத்தில் திமுகவுக்கு புது தெம்பை அளிக்கும் என திமுக தலைமை நம்புவதாக கூறப்படுகிறது.