Home -> News -> வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு 9ம் தேதி முதல் நீர் திறப்பு : முதல்வர் பழனிசாமி

வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு 9ம் தேதி முதல் நீர் திறப்பு : முதல்வர் பழனிசாமி

வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக அக்டோபர் 9ம் தேதி முதல் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் உள்ள பெரியாறு பங்கீட்டு நீர் மற்றும் பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள கண்மாய்களின் நீர் இருப்பும் சேர்த்து 6000 மி.க.அடி தண்ணீர் இருந்தால் பெரியாறு பாசனப் பகுதியில், ஒருபோக பாசன நிலங்களுக்கும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் சேர்த்து பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்.

இதன்படி, பெரியாறு வைகைப் பாசனத்திற்கு தண்ணீர் வழங்குமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, பெரியாறு பாசனப் பகுதியில் ஒருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் பாசனத்திற்கு 9.10.2019 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.