Home -> News -> உலகக்கோப்பை கிரிக்கெட் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான்!

உலகக்கோப்பை கிரிக்கெட் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், முக்கியமானதொரு போட்டியில் நியூசிலாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை அதிகரித்து கொண்டுள்ளது.

பர்மிங்ஹாமின் எட்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்களை எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஜிம்மி நேசஹம் 97 ரன்களும் (நாட் -அவுட்), கிராண்ட்ஹோமி 64 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹேன் அஃப்ரிடி 10 ஓவர்களில் வெறும் 28 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
238 ரன்கள் தான் டார்கெட் என்றாலும், நியூசிலாந்து பௌலிங் ஆச்சே….பாகிஸ்தான் சமாளிக்குமா என ரசிகர்களுக்கு சின்னதாய் ஓர் சந்தேகம் இருக்கதான் செய்தது. ஆனால், நியூசிலாந்தா இருந்தா என்ன….ஆஸ்திரேலியாவாக இருந்தால்தான் என்ன… என்பது போல், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து அணி வீரர்களின் பந்துவீச்சை ஆரம்பம் முதலே அடித்து நொறுக்கினர்.

குறிப்பாக, நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாபர் ஆசாம் மற்றும் ஹாரீஸ் சோகைல், நியூசிலாந்தின் பந்தைவீச்சை அடித்து துவம்சம் செய்து, தங்களது அணியை வெற்றி பெற செய்தனர். 49.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்களை பாகிஸ்தான் எடுக்கவே, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

ஹாரீஸ் சோகைல் 68 ரன்களும், முகமது ஹாசிஃப் 32 ரன்களும் எடுத்தனர். 101 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பாபர் ஆசாம் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 7 புள்ளிகளுடன் பட்டி.யலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ள பாகிஸ்தான், அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை அதிகரித்து கொண்டுள்ளது.

1992 உலகக்கோப்பை போட்டியில், யாரும் எதிர்பாராத விதமாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்த பாகிஸ்தான், அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.